வியாழன், 23 ஏப்ரல், 2015

அப்படியானால், சாத்தான் ஒரு ஸ்திரீயை 18 வருஷம் கட்டியிருந்தாரே, பிரதர் டோம்ஸான்?

நண்பர்களே,

சாத்தான் என்கிற ஒரு நபர் இல்லை என்று நான் யாரிடமாகிலும் சொன்னால் உடனே எழும்புகிற கேளிவிகளின் மாதிரி இப்படிதான்: அப்படியானால் ____ எப்படி? அப்படியானால் ____ எப்படி? அப்படியானால் ____ எப்படி?

எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் உரிமைபாராட்டவில்லை, எனக்கு தெரிஞ்சதெல்லாம் எழுதி முடிக்கவும் இல்லை. கர்த்தருக்கு சித்தமாயிருந்தால் எல்லா “அப்படியானால்” கேள்விகளுக்கும் ஒன்றுக்கு பிறகு ஒன்றாக பதிலளிப்பேன்.




“அப்படியானால் ____ எப்படி” கேள்விகளில் ஒன்றுக்கு இந்த பதிவில் பதிலளிக்கிறேன். அந்த கேள்வியானது: “அப்படியானால், சாத்தான் ஒரு ஸ்திரீயை 18 வருஷம் கட்டியிருந்தாரே?”

லூக் 13:16 இதோ, சாத்தான் 18 வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். 

சாத்தான் என்கிற வார்ததை இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மை தான், ஆனால், இந்த வசனத்தின் சூழமைவை கவனித்தீர்களா? இந்த ஸ்த்ரீயைப்பற்றி கூறுகிற முதல் வசனம் முதற்கொண்டு கவனிப்போம்:
லூக் 13:10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். 
லூக் 13:11 அப்பொழுது 18 வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். 
லூக் 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, 
லூக் 13:13 அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

அந்த ஸ்திரீ பிறப்பால் கூனி அல்லது கூன் முதுகுள்ள ஸ்திரீ அல்லை. அவருக்கு ஒரு பலவீனப்படுத்தும் ஆவி இருந்ததால் அவள் நிமிரக்கூடாத நிலைமையில் குனிந்திருந்தாள்.

இங்கே ‘பலவீனப்படுத்தும் ஆவி’ (ஆங்கில வேதாகமத்தில் a spirit[G4151] of infirmity[G769]) என்கிற சொற்றொடர் பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் ஒரு பெரிய சிக்கலாக இருந்தது. ஒருசிலர் இந்த சொற்றொடரை “பொல்லாத ஆவி” என்று எண்ணுகிறதுண்டு; ஆனால் ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G769 எண்ணுள்ள கிரேக்க வார்த்தைக்கு (astheneia) “பொல்லாத” என்கிற அர்த்தம் இல்லை. அதின் அர்த்தம் எப்பொழுதும் “நோய்” அல்லது “பிணி” என்பதே.

பொல்லாத ஆவி என்பதற்கு பொருந்தும் கிரேக்க சொற்றொடர் [G4190] - (πονηρός, ponēros) [G4151] - (πνεῦμα pneuma) என்பதே. இதை அப் 19:15, 16 வசனங்களில் பார்க்கவும்:
அப் 19:15 பொல்லாத ஆவி (evil[G4190] spirit[G4151]) அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, 
அப் 19:16 பொல்லாத ஆவியையுடைய (evil[G4190] spirit[G4151]) மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து... 

வேதத்தை வாசிக்கும்போது நாம் ஒருசில உண்மைகளை நாம் மனதில் வைக்க வேண்டும்:


  • மொழிகள் எப்பொழுதும் மாறுகிறது மற்றும் வளர்ச்சியடைகிறது. உதாரணமாக, கிறிஸ்துவுக்கு முன் எழுதப்பட்ட திருக்குரல் வாசிக்கிற ஒருவருக்கு திருக்குரலில் பயன்படுத்தியிருக்கும் தமிழ் மொழி உணர்ந்துகொள்வது எளிதல்ல. கலைஞ்சரைப் போல் யாரோ ஒருவர் விளக்கினால் மட்டுமே திருக்குரலின் விளக்கத்தை நமக்கு உணர்ந்துகொள்ள முடியும். மொழியும் எழுத்தும் ஒன்றுதான், ஆனால் விளக்கம் (அர்த்தம்) மாறிவிட்டது. இப்படியிருக்க, வழக்கற்றுப்போன கோய்னே கிரேக்கு (Koine Greek), எபிரேய மொழிகளில் எழுதப்பட்டுள்ள வேதத்தை 16ம் நூற்றாண்டில் அல்லது 17ம் நூற்றாண்டில் மொழிபெயர்த்தவர்களுக்கு முழுமையாக உணர்ந்துகொள்ள முடிந்திருக்குமா?
  • வேதம் ஒரு விஞ்ஞான ஆய்வுக்கட்டுரை அல்லை. ஒருவேளை வேதத்தில் விஞ்ஞான ரீதியான உண்மைகள் இருக்கலாம், அனால் வேதத்தின் கவனம் விஞ்ஞானம் அல்லை.

“சாத்தானால் கட்டப்பட்ட” ஸ்திரீக்கான நோய்யின் அறிகுறிகள்.


‘பலவீனப்படுத்தும் ஆவி’ (a spirit of infirmity) என்பதை விட ‘மன நோய்’ என்பதே பொருத்தமான மொழிபெயர்ப்பு என்றும், அந்த ஸ்திரீக்கு ஒரு மன நோய் இருந்தது என்றும் முதலிலே உங்களிடம் பகிர்ந்துகொள்ளுகிறேன்.

லூக் 13:11ல் இப்படி எழுதப்பட்டுள்ளது: “அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.” (She was bent over and could not fully straighten herself.)

இந்த நோய்க்கு மருத்துவ அறிவியலில் “மாற்றச் சீர்குலைவு ” (Conversion Disorder) என்று பெயர்.  இந்த நோய் உளச்சோர்வினால் உண்டாகிறது. நெருங்கினவர்களின் மரணம், காயப்படுதல், விபத்து போன்ற நிகழ்வுகள் மாற்றச் சீர்குலைவுக்கு காரணமாகும். யுத்தம் நடக்கும்போது பெரும் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்ட ஒருசில படைவீரர்கள் காயங்கள் இல்லாமலே மருத்துவமனைகளுக்கு வருவார்கள். பேசவும் நடக்கவும் முடியாமல் விறகைப் போல் இருப்பார்கள். (இந்த நோய்யைப் பற்றி தமிழில் அதிகமாக எழுதப்படவில்லை.)

என்னுடைய நண்பர் ஒருவருக்கு ஒருமுறை அவன் அருகில் ஒரு கைக் குண்டு விடித்தபோது மாற்றச் சீர்குலைவு ஏற்பட்டது. அவனுக்கு கைகால் அசைக்க முடியவில்லை, பேச முடியவில்லை. அவன் குணப்படுவதற்கு இன்னொரு அதிர்ச்சி தேவையாயிற்று. பெங்களூரில் எங்கள் வீட்டு வேலைக்காரி தன் மகன் வெளியூரில் கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டு, நடுங்கி, அவளுக்கு மாற்றச் சீர்குலைவு ஏற்பட்டது. அவளை மனநல மருத்துவரிடம் கொண்டுபோனோம். அந்த மருத்துவர் அந்த வேலைக்காரியின் சேலையைப் பிடித்து இழுக்கும் போல் காண்பித்தார். பெண்களுக்குள்ள உள்ளுணர்வின் நிமித்தம் அவள் மறுக்கத் தன் கையை அசைத்தாள். அந்நேரமே அவள் குணப்பட்டாள்.

நீங்கள் அவ்வளவு அறியப்படாத ஒருவர் என்று ஒரு நிமிடம் நினையுங்கள். குடியரசுத்தலைவர் (the president) உங்கள் ஊருக்கு வருகிறதை மக்கள் அனைவரும் மைதானத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்களோ மைதானத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறீர். குடியரசுத்தலைவர் பிரசங்க மேடைக்கு வந்த உடன் தன் வலது கையை உங்கள் நேர்க்கு சுட்டி, “திரு. <<உங்கள் பெயர்‍>> மைதானத்தின் மூலையில் உட்கார்ந்திருக்கிறதை பார்க்கிறேன், நீங்கள் இந்த பிரசங்க மேடைக்கு வரவேண்டும்” என்று உங்களை அழைத்து, உங்களை அணைத்துக்கொண்டால் உங்களுக்கு உண்டாகும் உணர்ச்சியின் வழிந்தோடுதல் எப்படியிருக்கும்? (தமிழில் திறமையுடன் விபரிக்க என்னால் இயலாது.)

இன்னும், குடியரசுத்தலைவர் அல்லை இயேசு கிறிஸ்துவே உங்களை பெயர்சொல்லி அழைத்து, உங்களை அணைத்துக்கொண்டால் உங்களுக்கு அந்த செய்கை எவ்வளவு அதிர்ச்சியூட்டும்? மாற்றச் சீர்குலைவு ஏற்பட்ட அந்த ஸ்த்ரீயை இயேசு தன்னிடம் அழைத்து அவள் மேல் தன் தமது கைகளை வைத்தபோது அவளுக்கு உண்டான அதிர்ச்சி அவளுடைய நோய்யை குணப்படுத்த உதவினது என்று எண்ணுகிறேன்.


அந்த ஸ்திரீயை சாத்தான் கட்டியிருந்தார் என்பதாகி இயேசு சொல்லவில்லையா?



சொன்னார். நீங்கள் உங்கள் பேச்சில் வழிமொழிகளை (உவமைகள், உருவகங்கள் ... figures of speech) பயன்படுத்தமாட்டீர்களா? இயேசு பரிசேயரிடம்: “குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்” (மத் 23:24) என்று சொன்னதற்கு உண்மையாகவே பரிசேயர் ஒட்டகத்தை விழுங்குவார்கள் என்கிற விளக்கம் உண்டா? “உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.” (மார் 9:37) என்று சொன்னதற்கு ஒரு கண் மட்டும் உள்ளவர்களும், இரண்டு கண்களும் இல்லாதவர்களும் மட்டும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்று விளக்கம் இருக்குமா?

ஒருவேளை, இயேசு சாத்தான் என்கிற வார்த்தையை ஒரு வழிமொழியாக பயன்படுத்தியிருக்கக் கூடாதா? வேதத்தில் எத்தனையோ முறை வழிமொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது?


இதை கவனியுங்கள்:



நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீயை குணப்படுத்துவதை விட கடினமான வேலை இறந்துபோனவர்களை எழுப்புவது. இறந்துபோனவர்களை எழுப்புவதற்கு தேவனுடைய ஒரே பேறான குமாரன் தேவையாயிருக்கிறதா? இயேசுவுக்கு முன் எலியாவும் (1ராஜா 17:17-24) எலிசாவும் (2ராஜா 4:35) இறந்துபோனவர்களை எழுப்பினாரே? தீர்க்கதரிசிகள் நோயாளிகளை குணப்படுத்தினாரே?

இயேசுவின் நாட்களில் யூதர்கள் தங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று உரிமைபாராட்டினார்கள். (யோவா 8:39) அல்லாமலும் அவர்கள் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரர்கள் (அப் 3:25) என்று வேதம் கூறுகிறது.

பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளுக்கு இறந்துபோனவர்களை எழுப்பவும், நோயாளிகளை குணப்படுத்தவும் முடிந்ததே? ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரர்கள் என்றும் உரிமைபாராட்டுகிற யூதர்களால் நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீயை குணப்படுத்த ஏன் முடியவில்லை? அல்லது அவளை குணப்படுத்த அவர்கள் ஏன் முயலவில்லை? (ஒருவேளை, உங்களால் ஒரு நோயாளியை குணப்படுத்த முடியுமா என்று என்னிடம் விசாரித்தால், முடியாது என்று பதிலளிப்பேன். ஏனெனில்,  உண்மையான, ஆதாரப்பூர்வமான குணப்படுத்தல்கள் நாம் உயிரோடிருக்கும் காலத்தில் நடக்கிறதில்லை.)


இயேசுவின் நாட்களில் யூதேயாவில் மாண்புமிக்கவர்களும் அறிஞர்களும் இருக்கவில்லையா? காய்பா, அன்னா, நிக்கொதேமு, கமாலியேல் போன்றவர்கள் இருந்தார்களே? அவர்களுக்கு அந்த ஸ்திரீயை ஏன் குணப்படுத்த முடியவில்லை? அவர்கள் முயற்சி செய்திருப்பாரா?

யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் எழைகள் கீழ்த்தரமானவர்களாக எண்ணப்பட்டிருந்தது என்று தோன்றுகிறது. (யாக் 2:2; லூக் 18:10-14 காணவும்). ஒருவேளை அந்த நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீ வழக்கமாக ஜெப ஆலயத்தின் மூலையில் எங்கேயோ உட்கார்நதிருக்கலாம். ஒருவேளை, ஜெப ஆலயத்தின் மூப்பர்கள் அவள்மேல் அக்கறை காட்டியிருந்தால், அவள் 18 ஆண்டுகளாக கஷ்டப்பட தேவையில்லையே.

அந்த ஸ்திரீக்கு நல்லதைச் செய்ய அவர்களு தடையாக நின்றது எதுவோ அது தான் சாத்தான் என்பதே என் கருத்து. அவர்களுடைய மதத்தின் மேட்டிமையோ, ஆணவமோ அதற்கு காரணமாக இருக்கலாம்.

சாத்தான் என்கிற வார்த்தைக்கு எதிர்கிற(வன்), விரோதி அல்லது மறுக்கிற(வன்) என்று விளக்கம். இப்பொழுது இந்த வசனங்களை கவனமாக வாசியுங்கள்:

1தெச 2:14 எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள். 
1தெச 2:15  அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து

தேவனுக்கு சித்தமாயிருந்தால் புதிய ஏற்பாடில் சாத்தான் என்கிற வார்த்தை முதல் நூற்றாண்டிலிருந்த யூதர்களின் மதத்தை சுட்டிக்காட்டுகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்வேன்.

முடிவுரை:


நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீக்கான நோய்யின் அறிகுறிகள் மாற்றச் சீர்குலைவின் அறிகுறிகளே. மாற்றச் சீர்குலைவு ஒரு உளவியல் கோளாறு; சரியான சிகிச்சை மூலம் மாற்றச் சீர்குலைவை குணப்படுத்த முடியும். அந்த கோளாறு ஒருவருக்கு ஏற்பட சாத்தான் அல்லது பேய் தேவையில்லை. சாத்தான் என்கிற வார்த்தை வழிமொழியாக பயன்படுத்தியிருக்கலாம், அல்லது யூதர்களின் மதத்தை மறைமுகமாக சுட்டிக்காட்ட பயன்படுத்தியிருக்கலாம்.


கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்

சனி, 18 ஏப்ரல், 2015

ஊமையான ஆவி பிடித்த வாலிபனும் சாத்தானும்

நண்பர்களே.

நாம் வேதத்தை வாசிக்கும்போது கதையின் ஓட்டத்துக்கு ஒப்‍பாகவும் நமது முன்னெண்ணங்களுக்கு ஒப்‍பாகவும் வாசிக்கிறதைத் தவிர, ஆராய்ந்து வாசிக்கிறதில்லை.  ஊமையான ஆவி பிடித்தது என்று எண்ணப்படுகிற வாலிபனைப் பற்றிய விவரணை இதற்கான ஒரு மிகச்சிறந்த உதாரணம்.



அந்த வாலிபனைப் பற்றிய விபரங்கள் பொழிப்பான 3 சுவிசேஷங்களிலிருந்தும் ஒன்று சேர்ப்போம்:

மத் 17:15 ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்
மார் 9:17 அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 
மார் 9:18 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 
லூக் 9:39 ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கின பின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.

இந்த நிகழ்சி இயேசு மறுரூபமான பிறகு சீடர்களுடன் திரும்பிவரும்போது நடந்தேறினது.


  • 3 சுவிசேஷங்களிலும் ஒரே தந்தையும் மகனும் தான்.
  • இயேசுவோ அந்த வாலிபனுடைய தந்தையோ பேசின வார்த்தைகள் 3 சுவிசேஷங்களிலும் ஒரேபோல அல்லை.
  • மத் 17:15ல் அந்த வாலிபன் சந்திரரோகி.
  • மார் 9:17ல் ஊமையான ஆவியால் பிடிக்கப்பட்டவன்.
  • லூக் 9:39ல் ஆவியால் பிடிக்கப்பட்டவன்.

இப்போது, அந்த வாலிபனுடைய நோயின் அறிகுறிகளை கவனிப்போம் (ஒருசில வார்த்தைகள் தமிழ் வேதாகமத்தில் சரியாக மொழிபெயர்க்கப்படாததால் வேறு மொழிபெயர்ப்புகளிலிருந்தும் எடுத்துள்ளது):

  • அடிக்கடி தீயிலும், ஜலத்திலும் விழுகிறான்.
  • நுரை தள்ளுகிறான்.
  • பல்லைக் கடிக்கிறான்
  • சோர்ந்துபோகிறான்.
  • அலறுகிறான்.
  • காயப்படுத்துகிறான்.
  • நொறுக்கப்படுகிறான்.

இந்த அறிகுறிகளை ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரிடம் காண்பித்தால், அந்த வாலிபனுடைய நோய் வலிப்பு நோய் (காக்காய் வலிப்பு, epilepsy) என்று சொல்வார். ஆங்கிலத்தில் ESV, ASV, ISV, RV போன்ற மொழிபெயர்ப்புகளிலும் தமிழில் கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளிலும் மத் 17:15ல் “சந்திரரோகி” (lunatic) என்பதற்கு பதிலாக “வலிப்பு நோயாளி” (epileptic) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.


“சந்திரரோகத்துக்கும்” “வலிப்பு நோய்க்கும்” உள்ள மாறுபாடு.



“சந்திரரோகம்” என்கிற பெயரே பழைய காலத்திலிருந்த  மூடநம்பிக்கையின் பலன். பழைய காலத்துள்ள மனிதர்கள் வலிப்பு நோய் சந்திரனுடைய அல்லது சந்திரக்கடவுளின் பாதிப்பினால் உண்டாகிறது என்பதாக எண்ணினார்கள். ஆதலால், சந்திரரோகம் என்கிற பெயர் உண்டாயிற்று. இப்பொழுது மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணி, வலிப்பு நோய்க்கும் சந்திரனுக்கும் தொடர்பு இல்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆங்கில வேதாகமத்தில் (KJV) மத் 17:15ல் பயன்படுத்தப்பட்டுள்ள lunatick (சந்திரரோகி) என்கிற வார்த்தை லத்தீன் மொழியில் luna (சந்திரன்) என்கிற வார்த்தையிலிருந்தும் உண்டானது. இதற்கான கிரேக்க வார்த்தை selēniazomai (ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G4583) selēnē (சந்திரன் G4582) என்கிற வார்த்தையிலிருந்தும் உண்டானது.

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பிழைத்திருக்கும் கல்விகற்ற யாரும் வலிப்பு நோயை ஒரு மன நோய் (பைத்தியம்) என்று எண்ணுகிறதில்லை. பெயர்பெற்ற எத்தனையோ சிறந்த சிந்தனையாளர்கள், பேரரசர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் வலிப்பு நோயாளிகளாக இருந்தார்கள். ஒருசில உதாரணங்கள்: சாக்ரடீஸ் (Socrates), ஜூலியஸ் சீசர் (Julius Caesar), ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoevsky), சூசன் போயில் (Susan Boyle), விளாடிமிர் லெனின் (Vladimir Lenin).

நமக்கு பைத்தியத்துக்கும் வலிப்பு நோய்க்கும் உள்ள மாறுபாடு தெரிந்திருக்கிறது. வலிப்பு நோய் நரம்பியல் சார்ந்த கோளாறு. பைத்தியம் ஒரு உளவியல் கோளாறு. பழைய காலத்திலிருந்த மனிதர்களுக்கு இந்த மாறுபாடு தெரிந்திருக்கவில்லை.

சந்திரரோகமும் (மத் 17:15), ஊமையான ஆவியும் (மார் 9:17) ஒன்றுதானா? இவைகள் இரண்டும் ஒனறுதான் என்று நிரூபிக்கக் கூடுமா? ஊமையான ஆவி சந்திரனிலிருந்தும் வருகிறதா? வேதத்திலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டிருக்கயில் ஏன் மத்தேயுவும் மார்குவும் ஒரே நிகழ்வை வேற்றுமையுடன் எழுதினார்?

அந்த வாலிபனுடைய நோய் என்ன என்பதற்கு உறுதியில்லை, அப்படியிருக்க அந்த நோய் சாத்தானால் அல்லது பிசாசினால் உண்டானது என்பதற்கு உறுதி இருக்குமா?

மத் 17:18ல் இயேசு பிசாசை அதட்டினார் என்றும் லூக் 9:42ல் இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டினார் என்றும் எழுதப்பட்டுள்ளதை எப்படியும் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால், மார்கு 9:25ல் இயேசு ஊமையும் செவிடுமான ஆவியை அதட்டினார் என்று வாசிக்கும்போது உண்மையாகவே எனக்கு சிரிப்பு வருகிறது. சாதாரண மனிதராகிய நமக்கு செவிடானவர்களிடம் பேசுவது பயனற்றதாக இருக்கிறது என்று தெரியும், அப்பொழுது ஞானிகளில் ஞானியான இயேசவுக்கு தெரியாதா?

சிறிது காலத்திற்குமுன் வரைக்கும் வலிப்பு நோய்க்கு அங்கீகரிக்கப்பட்ட, தரப்படுத்தப்பட்ட சிகிச்சை இருக்கவில்லை என்பதை நினைத்தால், முதல் நூற்றாண்டில் மருந்துகளோ, உபகரணங்களோ இல்லாமல் இயேசு வலிப்பு நோயாளியை குணப்படுத்தினது அவர் தேவனுடைய குமாரன் என்பதற்கான மிகச்சிறந்த அத்தாட்சி.

வலிப்பு நோய் பிசாசிலிருந்தும் உண்டாகிறதானால் மூளையின் மடல் நீக்கம் (lobotomy) பண்ணி வலிப்பு நோயாளிகளை குணப்படுத்துகிற மருத்துவர்களுக்கு சாத்தான் அல்லது அசுத்த ஆவி மூளையின் எந்த மடலுக்குள் ஒளிந்திருக்கிறான் என எப்படி தெரியும்? அல்லது சாத்தானுக்கு ஒளிந்திருக்கும்படிக்கு மூளைக்குள் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறதா?

முடிவுரை: 


சாத்தான் என்றோ, ஊமையான ஆவி என்றோ, அசுத்த ஆவி என்றோ என்ன பெயரினால் அழைத்தாலும் சரி, இயேசு குணப்படுத்தின அந்த வாலிபனுடைய நோய் வலிப்பு நோய்தான். வலிப்பு நோய் ஒரு நரம்பியல் கோளாறு. அது சாத்தானால் உண்டாகிறதில்லை. வேதாகமம் ஒரு அறிவியல் புத்தகம் அல்லை என்பதை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சந்திரரோகி, ஊமையான ஆவி, பிசாசு போன்ற வார்த்தைகள் அப்பொழுதிருந்த மூடநம்பிக்கைகளுக்கு அத்தாட்சியாக இருக்கிறதைத் தவிர, சாத்தான் என்கிற ஒரு நபர் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி அல்லை.

கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்

சனி, 11 ஏப்ரல், 2015

பவுலின் மாம்சத்திலே முள்ளும் “அனுகூலமான” சாத்தானும்

நண்பர்களே,

ஏராளமான இறையியலாளர்களும் போதகர்களும் 2கொரி 12:7ல் பவுல் கூறுகிற “மாம்சத்திலே முள்” என்ன என்பதைப்பற்றி விரிவாக ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் வேறுவேறு முடிவுகளை அடைந்துள்ளனர். அவர்களுடைய முடிவுகளைப்பற்றி உணர்ந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் என் கவனத்துக்கும் அவர்களுடைய கவனத்துக்கும் மாறுபாடுகள் இருக்கிறது. நாம் இப்பொழுது இந்த வசனத்தை வேறொரு முறையாக பார்க்கப்போகிறோம்.

2கொரி 12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையின் நிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. 
எளிதாகச் சொன்னால், பவுல் கூறுகிற கருத்து என்னவென்றால்.

  • அவருக்கு அளிக்கப்பட்ட வெளிப்பாடுகளைப்பற்றி அவர் மிதமிஞ்சி பெருமைபாராட்டாதபடிக்கு அவருக்கு ஒரு உடல் கோளாறு அளிக்கப்பட்டது என்கிறார் பவுல்.

    (தேவனிடத்திலிருந்தும் ஏதோ கொஞ்சம் வெளிப்பாடுகள் பெற்றுக்கொண்டார்கள் என்று எண்ணி, பெருமைபாராட்டுகிற போதகர்களை நமது சுற்றிலும் பார்க்கிறதில்லையா?)
  • தனக்கு ஏற்பட்ட உடல் கோளாறை பவுல் "சாத்தானுடைய தூதன்" என்று அழைத்து, அந்த உடல் கோளாற் அவர் பெருமைபாரட்டாதபடிக்கு அவரை தடுக்கிறது என்கிறார்.

இந்த வசனத்தின் கருத்தை விளக்கும்படிக்கு நான் என்னையே ஒரு உதாரணமாக காண்பிக்கிறேன். எனக்கு தேவனிடத்திலிருந்தும் ஏராளமான வெளிப்பாடுகள் கிடைத்திருக்கிறது என்று ஒரு நிமிடம் நினையுங்கள். ஆனால், எனக்கு ஒரு பேச்சு கோளாறு இருக்கிறது (திக்குவாய்). அந்த பேச்சு கோளாறு பெருமைபாராட்டுகிறதில் நின்றும் என்னை தடுக்கிறது. என்னை தடுக்கிற அந்த பேச்சு கோளாறை நான் என் கலாச்சாரத்தின்படிக்கு நான் சாத்தானுடைய தூதன் என்று அழைக்கிறேன். நான் என்ன பெயரிட்டு அழைத்தாலும், அது என்னை பெருமைபாராட்டுகிறதிலிருந்தும் தடுக்கிறது என்பது நல்லதும் நேரானதும் அல்லவா?

சாத்தானுடைய தூதன் என்று என்னதைப் பற்றி கூறினதோ அது கூறினவருக்கு நேரான, நல்ல பயன் அளிக்கிறது. கிறித்தவர்கள் போதிக்கிற சாத்தான் குற்றஞ்சாட்டுகிறவனும், தேவனுக்கும் மனிதர்களுக்கும் எதிரியும் அல்லவா? அப்படிப்பட்ட சாத்தானிலிருந்தும் நல்லதும் நேரானதுமான பயன் உண்டாகிறதற்கு வாய்ப்பிலையே! அதேவேளையில், நல்லது அனைத்தும் தேவனிடத்திலிருந்தும் வருகிறது, அல்லவா?

தேவனுடைய மனிதன் நல்லது பண்ணும்படிக்கு சாத்தான் அவனுடைய மாம்சத்துக்குள் முட்களை நுழைக்கமாட்டார். இந்த வசனம் சாத்தான் என்கிற ஒரு நபர் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறதில்லை; மாறாக, எழுத்தாளருடைய கலாச்சாரம், அவர் பயன்படுத்துகிற வழிமொழிகள் என்பவைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது.

தொடரும்...
கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்




செவ்வாய், 7 ஏப்ரல், 2015

யோபும் சாத்தானும் - பகுதி #002, கர்த்தருடைய சந்நிதி ...

நண்பர்களே,

இது யோபும் சாத்தானும் என்னும் தொகுதியின் 2ம் பகுதி. 1ம் பகுதியை இங்கே வாசிக்கலாம்.

இந்த பதிவில் ஏன் சாத்தான் பரலோகத்தில் கர்த்தருடைய சந்நிதிக்கு சேரக்கூடாது என்பதை விவரிப்பேன்.

கர்த்தருடைய சந்நிதி


யோபு 1:6 ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். 

இந்த வசனத்தில் “கர்த்தருடைய சந்நிதி” என்கிற சொற்றொடர் கேட்கும்போதே இந்த நிகழ்சி பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் இருக்கும் அறையில் நடந்தது என்கிற எண்ணம் பெரும்பாலும் கிறித்தவர்களுக்கு உண்டாகிறது. அந்த புரிந்துகொள்ளுதல் சரியானதா என்பதை கவனிப்போம்.

சவுலை இஸ்ரவேல் மக்களுக்கு ராஜாவாக நியமிக்கும் முன் சாமுவேல் அவர்களிடம்:

1சாமு 10:19 நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான்.

மேற்சொன்ன புரிந்துகொள்ளுதல் சரியானதாக இருந்தால் சாமுவேலின் காலத்தில் இருந்த ஏறத்தாழ 13 லக்ஷத்துக்கு மேற்பட்ட (2சாமு 24:9) மனிதர்கள் பரலோகத்தில் கர்த்தருடைய சிங்காசனம் இருக்கும் அறைக்கு போகவேண்டயதாக இருக்கும். அப்படி நடந்ததுண்டா? முன்னும் பின்னும் உள்ள வசனங்களை கவனித்தால் இந்த நிகழ்சி நடந்தேறினது மிஸ்பாவில் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

1சாமு 10:17 சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,...

மிஸ்பா பரலோகத்தில் அல்லை, அது இஸ்ரவேலிலுள்ள ஒரு இடம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.


ஆட்டுக்குட்டிகளுக்கும் காட்டுப்புறாக்களுக்கும் ஓசியில் ஒரு பரலோக பயணம்?!



பிள்ளைப்பேறுக்கு பிறகு பெண்களின் சுத்திகரிப்பைப் பற்றி லேவியாகமம் 12ம் அதிகாரத்திலிருந்தும்:

லேவி 12:6 அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
லேவி 12:7 அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள்...

சுத்திகரிக்கப்படவேண்டிய பெண் கொண்டுவருகிற ஆட்டுக்குட்டியையும் காட்டுப்புறாவையும் ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட வேண்டும். ஒரு வருடம் 1000 பேருக்கு ஏறத்தாழ 30 குழந்தைகள் பிறக்கும் என்று புள்ளியியல். மோசை இந்த கட்டளையை எழுதினபோது இஸ்ரவேலில் யுத்தத்துக்கு புறப்படத்தக்க வயதுள்ள 6 லக்ஷம் ஆண்கள் இருந்தார்கள். ஏறத்தாழ அவ்வளவு பெண்களும் இருக்கவேண்டும்; அதாவது 12 லக்ஷம் பேர்கள். மேற்சொன்ன கணக்கின் படிக்கு இந்த 12 லக்ஷம் பேர்களுக்கு ஒரு வருடம் 3,600 குழந்தைகள் பிறக்கும். இவர்களுக்காக பலிசெலுத்தும்படிக்கு ஆசாரியர் 3,600 ஆட்டுக்குட்டிகளையும், 3,600 காட்டுப்புறாக்களையும் எடுத்துக்கொண்டு பரலோகத்துக்கு போகுவாரா?

மாதவிடாய் முடிந்து சுத்திகரிக்கப்படவேண்டிய பெண் கொண்டுவருகிற இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது  இரண்டு புறாக்குஞ்சுகளை ஆசாரியர் கர்த்தருடைய சந்நிதியில் பலியிடவேண்டும் (லேவி 15:30). அதாவது, இஸ்ரவேலில் அப்பொழுதிருந்த 6 லக்ஷம் பெண்களுக்காக ஒவ்வொரு மாதவும் 12 லக்ஷம் காட்டுப்புறாக்களுடன் பலிசெலுத்த ஆசாரியர் பரலோகத்துக்கு போகுவாரா? (இதைப்போன்ற ஏராளமான உதாரணங்களை இன்னும் எடுத்துரைக்கலாம்.)

மேற்சொன்ன சூழமைவுகளில் “கர்த்தருடைய சந்நிதி” என்கிற சொற்றொடருக்கு ஆசரிப்புக்கூடாரம் அல்லது தேவாலயம் (லேவி 12:6; 15:29) என்று உணர்ந்துகொள்ள உங்களுக்கு பகுத்தறிவிருக்குமே? யோப் 1, 2 அதிகாரங்களை வாசிக்கும்போது அங்கேயும் “கர்த்தருடைய சந்நிதி” என்பதற்கு ஆசரிப்புக்கூடாரம் அல்லது தேவாலயம் என்றுதான் விளக்கம் என்று உணர்ந்துகொள்ள முடியாதபடிக்கு உங்களுடைய பகுத்தறிவுக்கு என்னவாயிற்று?

ஏன் சாத்தான் பரலோகத்தில் கர்த்தருடைய சந்நிதிக்கு சேரக்கூடாது?


யோபின் காலத்துக்கு முன் எப்பொழுதோ சாத்தான் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தார் என்றும் தேவன் அவனை பூமிக்கு கொட்டினார் என்றும்தானே கிறித்தவர்களின் போதனை? அப்படி பூமிக்கு கொட்டப்பட்ட சாத்தான் எப்படி திரும்பவும் பரலோகத்துக்குச் சேருவான்?

பாவம் பண்ணின ஆதாமையும் ஏவாளையும் ஏதேனில் நின்றும் துரத்தினபோது அவர்கள் திரும்பவும் ஏதேன் தோட்டத்துக்குச் சேராதபடிக்கு கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்த (ஆதி 3:24) தேவனுக்கு, பரலோகத்திலிருந்தும் துரத்தப்பட்ட சாத்தான் திரும்பவும் அங்கே செராதபடிக்கு பாதுகாப்பு ஏற்படுத்த முடியவில்லையா? உங்கள் தேவனுடைய பாதுகாப்பு அமைப்பைப் (security system) பற்றி கொஞ்சம் விபரிக்கக்கூடுமா?

கீழ்வரும் வசனங்களை 2-3 தடவை வாசியுங்கள்:

சங் 5:4 நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
சங் 5:5 வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.
சங் 11:5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது

இந்த வசனங்களுக்கு அடிக்குறிப்பாக “சாத்தானைத் தவிர” என்று எழுதப்பட்டுள்ளதா?
யோவா 8:44 ... அவன் [பிசாசு] ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் ... 
பொய்க்குப் பிதாவானவனுக்கும் சத்தியத்துக்கு (இயேசுவுக்கு) பிதாவானவருக்கும் தொடர்பு என்ன?

ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிற சாத்தானுக்கும் தேவனுக்கும் தொடர்பு என்ன?

1யோவா 1:5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;...
2கொரி 6:14 ... நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது
தொடரும்...
கிறிஸ்துவுக்குள்
டோம்ஸான் கட்டய்க்கல்

சனி, 4 ஏப்ரல், 2015

யோபும் சாத்தானும் - பகுதி #001

நண்பர்களே,

சாத்தான் ஒரு நபர் கிடையாது என்று சொன்ன உடனே எழும்புகிற கேள்வி: “அப்படியானால், யோபை சோதிக்கும்படிக்கு கர்த்தர் சாத்தானை அனுப்பினாரே?” என்பதே.

யோபுக்கு 5 வகையான சோதனைகள் ஏற்பட்டது, அவைகளை ஒவ்வொன்றாக கவனிக்கலாம்:

சோதனை #1:


யோபு 1:13 பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,
யோபு 1:14 ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில்,
யோபு 1:15 சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். 

இந்த உபத்திரவம் அல்லது சோதனை சாத்தானிடத்திலிருந்தும் உண்டானது என்று வேதம் கூறுபதில்லை; மாறாக, சபேயரிடத்திலிருந்தும் உண்டானது என்று வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.

சபேயர் யார்?

  1. நோவாவின் குமாரரில் ஒருவராகிய காமின் குமாரன் கூஷின் குமாரனாகிய சேபாவின் சந்ததியினர். (ஆதி 10:7) 
  2. அல்லது, ஆபிரகாமின் இரண்டாம் மனைவியாகிய கேத்தூராளின் குமாரனாகிய யக்க்ஷானின் குமாரனாகிய சேபாவின் சந்ததியினர். (ஆதி 25:1-3) 

சாலொமோனிடம் விடுகதைகள் கேட்கிறதற்கு வந்த சேபாவின் ராஜஸ்திரீ (1ராஜா 10:1) இந்த சந்ததிக்கு உட்பட்டவள்.

ஒருவேளை, புறஜாதியார் அனைவரும் சாத்தானுடைய கூட்டாளிகள் என்று வற்புறுத்தலாம், ஆனால், இஸ்ரவேல் மக்களை தண்டிப்பதற்காக கர்த்தர் புறஜாதியாரை பலமுறை பயன்படுத்தினார் என்பதை மறக்கவேண்டாம். (நியா 2:14; 3:8; 4:2; 10:7; 1சமு 12:9)

அதுவும் அல்லாமல், சேபாவைப் பற்றி வேதம் கூறுகிறதை கவனியுங்கள்.
  • நீதியோடும் நியாயத்தோடும் ஏழைகளை விசாரிக்கிற ராஜாவின் குமாரனுக்கு (சங் 72:1, 2) - அடையாளமாக கிறிஸ்துவுக்கு - சேபாவின் ராஜாக்கள் வெகுமானங்களை கொண்டுவருவார்கள் என்கிறார் சலோமோன் (சங் 72:10).
  • நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக சேபாவின் ராஜஸ்திரீ குற்றஞ்சுமத்துவாள் என்றார் இயேசு. (மத் 12:42)
சுருக்கமாகச் சொன்னால் சேபா தேசத்தார் சாத்தானுடைய கூட்டாளிகள் என்று வேதத்தில் எங்கேயும் இல்லை.

சோதனை #2:


யோபு 1:16 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது....

கவனமாக வாசியுங்கள்: வானத்திலிருந்தும் விழுந்தது தேவனுடைய அக்கினியா அல்லது சாத்தானுடைய அக்கினியா? தேவனுடைய அக்கினியை தேவனுக்கு கீழ்படியாதவனாகிய சாத்தானிடம் தற்காலிகமாக ஒப்பளித்தாலும் கூட அவன் அதை தேவனுக்கு திரும்பிக்கொடுப்பான் என்பதற்கு உறுதி உண்டா?

வேதத்தில் வேறு எங்காவது சாத்தானோ அவனுடைய கூட்டாளிகளோ வானத்திலிருந்தும் அக்கினியை விழச்செய்ததாக எழுதப்பட்டிருக்கிறதா? இல்லையே! சாத்தானுடைய கூட்டாளிகளுக்கு வானத்திலிருந்தும் அக்கினியை விழச்செய்ய வல்லமையிருந்தால் எலியாவின் காலத்திலிருந்த பாகாலின் 450 தீர்க்கதரிசிகளுக்கு வானத்திலிருந்தும் அக்கினியை விழச்செய்ய ஏன் முடியவில்லை? (1ராஜா 18)

வானத்திலிருந்தும் அக்கினியை விழச்செய்கிறது தேவனுக்கும் தேவனுடைய மக்களுக்கும் அடுத்தது.
  • ஆதி 19:24 ... கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின் மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, ... (கர்த்தராலே, சாத்தானாலே அல்லை)
  • யாத் 9:23 ... மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின் மேல் வேகமாய் ஓடிற்று; எகிப்து தேசத்தின் மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்; (இங்கேயும் சாத்தான் இல்லை)
  • தன்னிடத்தில் விசாரிக்கும்படிக்கு அகசியா ராஜா அனுப்பின ஆட்கள் மேல் எலியா அக்கினியை விழச்செய்தது: (2ராஜா 1:12, 14)
  • இஸ்ரவேல் மக்களை தொகையிட்டதற்கு உண்டான தேவகோபம் இஸ்ரவேலை விட்டுநீங்கும்படிக்கு தாவீது பலிசெலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினபோது; வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்தது... (1நாளா 21:26)
  • தான் கட்டின தேவாலயத்தில் சாலொமோன் ஜெபம்பண்ணினபோது அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது (2நாளா 7:1)
  • புதிய ஏற்பாடில் இயேசுவையும் சீடர்களையும் ஏற்றுக்கொள்ளாத சமாரியரைப் பற்றி யாக்கோபும் யோவானும்: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டது (லூக 9:54)

அடையாள ரூபமாக எழுதப்பட்ட வெளிப்படுத்தலின் விசேஷத்தில் உள்ள இரண்டாவது மிருகத்தைத் தவிர (வெளி 13:13), வேறு எல்லாச் சூழமைவுகளிலும் அக்கினியை வானத்திலிருந்தும் விழச்செய்தவர்கள் தேவன் அல்லது தேவனுடைய பிள்ளைகளே.

தேவனுக்கு கீழ்படியாதவனாகிய சாத்தானுக்கு வானத்திலிருந்தும் அக்கினி விழச்செய்கிற வல்லமையிருந்தால் அவன் மனிதர்களை எப்பொழுதே அழித்திருப்பான்? ஒருவேளை, அப்படியல்லை, தேவன் அனுமதித்தால் மட்டுமே சாத்தான் தீங்குச் செய்வான் என்று வற்புறுத்தலாம், ஆனால், தேவன் அனுமதித்தால் மட்டும் தீங்குச் செய்கிறவன் தேவனை மறுக்கிறவன் அல்லை. தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறவன். சாத்தான் தேவனுக்கு கீழ்பட்டிருக்கிறவனாகில் அவனையும் அவனுடைய செய்கைகளையும் அழிக்கும்படிக்கு இயேசு மனிதனாக பிறக்கத் தேவையில்லையே! (எபி 2:14; 1யோவா 3:8).

சோதனை #3


  • யோபு 1:17 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்;...

இங்கே சாத்தான் யோபுக்கு கேடுபண்ணினார் என்று எழுதப்பட்டுள்ளதா? இல்லையே! மாறாக கல்தேயர் கேடுபண்ணினார்கள் என்று தானே எழுதப்பட்டுள்ளது?

கல்தேயர் கேடு பண்ணினபோதெல்லாம் அந்த கேடு சாத்தானிடத்திலிருந்தும் உண்டானதா?

இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் பண்ணினபோது தேவன் அவர்களை தண்டிக்கும்படியாக கல்தேயர் இடத்திலும், கல்தேயர்களின் நாடாகிய பாபேலின் அரசர்களிடத்திலும் ஒப்படைத்தார் என்று வேதம் கூறுகிறது.

2ராஜா 24:2 அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும் அவன்மேல் வரவிட்டார்; .... அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.
2நாளா 36:17 ஆதலால் அவர் [கர்த்தர்] அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

தேவன் இஸ்ரவேலை பாபிலோணின் அரசனாகிய நேபுகாத்நேச்சார் இடத்தில் ஒப்படைத்தார் என்பதாகி பலமுறை சொன்ன பிறகு, நேபுகாத்நேச்சாரை “என் ஊழியக்காரன்” என்றும் அழைத்தார்.“

எரே 25:9 இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல் போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (எரே 27:6; 43:10 காணவும்)
சுருக்கமாகச் சொன்னால், கல்தேயர் அல்லது, பாபிலோனியர் சாத்தானுடைய ஊழிக்கார் என்று கூறுகிற வசனம் எதுவும் இல்லை.

சோதனை #4


யோபு 1:18 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,
யோபு 1:19 வனாந்தரவழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
இதில் எங்கேயும் சாத்தான் பெருங்காற்றை கொண்டுவந்தார் என்று எழுதப்படவில்லை! இதற்குமுன் அக்கினியைப் பற்றிச் சொன்னதுபோல, இயற்கை சக்திகளை அடக்குகிறது தேவனுக்கும் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் அடுத்தது.

  • எகிப்திலிருந்தும் இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும் முன் மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார் (யாத் 10:13)
  • எகிப்திலிருந்தும் புறப்பட்ட இஸ்ரவேல் மக்கள் செங்கடலை கடந்துபோகவேண்டிய வேளையில் மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. (யாத் 14:21; யாத் 15:10உம் காணவும்).

பழைய ஏற்பாடில் இன்னும் ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது.

புதிய ஏற்பாடில் இயேசு சுழல்காற்றை அடங்கச்செய்ததைப் பற்றி வாசிக்கிறோம். (மார் 4:37-41). அதைப் பார்த்த ஜனங்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். சாத்தானுக்கும் அதே வல்லமை இருந்ததானால், ‘இதென்னா பெரிய விஷயமா? சாத்தானும் இதுதான் பண்ணுவானே?’ என்று சொல்லுவார், அல்லவா?

சாத்தானுக்கு தேவனுக்கு (அல்லது இயேசுவுக்கு) இருக்கிற அதே வல்லமை இருந்தால், அவனை தோற்கடிக்க தேவனாலே கூடுமா?

இயற்கை சக்திகள் அனைத்தும் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறதைத் தவிர, சாத்தானுக்கு கீழ்ப்படிந்திருக்கிறதில்லை. (உதா எரே 5:22; சங் 29:3)


சோதனை #5



யோபு 2:7 அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

இந்த ஒரே ஒரு சோதனையில் மட்டும் சாத்தானுடைய பெயர் நேரடியாக எழுதப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

யோபுக்கு ஏற்பட்ட அதே நோய், ஒவ்வொரு அம்சத்திலும், தேவனுக்கு கீழ்ப்படியாதவருக்கு வரச்செய்வார் என்று தேவன் கூறியிருக்கிறதை கவனிக்கவும்:
உபா 28:35 உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.

இந்த இரண்டு வசனங்களும் ஆங்கில வேதாகமத்திலிருந்தும் எடுத்தெழுதுதியிருக்கிறதை கவனியுங்கள். (ஒவ்வொரு வார்த்தையின் வலபக்கத்திலுள்ள எண் ஸ்ட்ராங்ஸ் அகராதியில் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் குறியீட்டு எண்).

Deu 28:35 The LORD shall smite[H5221] thee in the knees, and in the legs, with a sore[H7451] botch[H7822] that cannot be healed, from the sole[H3709] of thy foot[H7272] unto the top of thy head[H6936].

Job 2:7 So went Satan forth from the presence of the LORD, and smote[H5221] Job with sore[H7451] boils[H7822] from the sole[H3709] of his foot[H7272] unto his crown[H6936].

இரண்டும் ஒரே விதமான வாதை. கர்த்தரை மறுதலித்த இஸ்ரவேல் மக்களுக்கு தண்டனை அளிக்கிறதற்கு கர்த்தர் போதுமாயிருந்தது, ஆனால், உத்தமனும் சன்மார்க்கனும் ஆயிருந்த யோபை பாதிக்கிறதற்கு சாத்தான் தேவைப்பட்டது! ஏன்? ஏன்?

அப்படியானால், யோபுக்கு உபத்திரவம் உண்டுபண்ணினது யார்?

அடுத்த பகுதியில் தொடரும்.

கிறிஸ்துவுக்குள்
டோம்ஸான் கட்டய்க்கல்

புதன், 1 ஏப்ரல், 2015

சாத்தானும் “விழுந்துபோன தூதர்களும்” - 002 - 1நாளாகமம் 21:1ல் சாத்தான்.

வேதாகம மொழிபெயர்ப்புகளில் சாத்தான் என்கிற வார்த்தை முதல்முறையாக காணப்படுகிறது 1நாளாகமம் 21:1லே. 1நாளாகமம் 21ல் விபரிக்கப்படுகிற நிகழ்சி என்னவென்றால் தாவீது இஸ்ரவேலைத் தொகையிட்டதும் அதற்கு அவருக்கு கிடைத்த தண்டனையும்.
  
1நாளா 21:1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
 இதே நிகழ்சி 2 சமுவேல் 24லிலிருந்தும்:

2சமு 24:1 கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின் மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.
இந்த இரண்டு சூழமைவுகளிலும்:

  • சோதிக்கப்பட்ட நபர்: தாவீது. (2சமு 24:1; 1நாளா 21:1) 
  • நிகழ்நத விஷயம் இஸ்ரவேல் தொகையிடப்பட்டது(2சமு 24:1; 1நாளா 21:1). 
  • தொகையிடப் போனவர் யோவாப் (2சமு 24:4; 1நாளா 21:4). 
  • தண்டனை அளிக்க பயன்படுத்தப்பட்டவர் சங்கரிக்கிற தூதன். (2சமு 24:17; 1நாளா 21:15)

இந்த இரண்டு சூழமைவுகளிலும் இருக்கிற ஒரே வித்தியாசம் அல்லது மிகப்பெரிய வித்தியாசம் தாவீதை ஏவிவிட்டது யார் என்பதே.

  • 1நாளாகமம் 21:1ன் படி சாத்தான் ஏவிவிட்டார். 
  • 2சமுவேல் 24:1ன் படி கர்த்தர் ஏவிவிட்டார். 

அப்படியானால், சாத்தானும் கர்த்தரும் ஒருவரா? அல்லது, வேதாகமத்தில் முரண்பாடுகள் இருக்கிறதா? 

இந்த விஷயத்தைப் பற்றி கிறித்தவ போதகர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் தெளிவான பதில் கொடுக்கமாட்டார்கள். ஒரு சிலர் கேட்கிறவனைப் பற்றி ‘இவனுக்கு இதுவும் கூட தெரியாதா?’ என்று கேளி பண்ணுவார்கள். இன்னும் சிலர், அவர்களுடைய அறிவின்மையை மறைக்கும்படிக்கு சும்மா சிரிப்பார்கள். 

இந்த இரண்டு சூழமைவுகளை பயன்படுத்தி நாத்திகர்களும் கிறிஸ்தவத்தை மறுதலிக்கிறவர்களும் கர்த்தர் தான் சாத்தான், சாத்தான் தான் கர்த்தர் வற்புறுத்துவார்கள். 

அதிர்ச்சிகரமான உண்மை:

1, 2 நாளாகம புத்தகங்ளிலிருந்தும் ஒருசில வசனங்களை மற்று புத்தகங்ளுடன் ஒப்பிட்டு பார்ப்போம். (தயவு செய்து இந்த பதிவை வாசிக்கும்போது உங்கள் வேதாகமத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.)


உதாரணம் #1: (8? அல்லது 18?)

2ராஜா 24:8 யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு (18) வயதாயிருந்து...
2நாளா 36:9 யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு (8) வயதாயிருந்து...

 உதாரணம் #2: (3,300? அல்லது 3,600?)


1ராஜா 5:15 சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் எழுபதினாயிரம் பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரம் பேரும்,
1ராஜா 5:16 இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறு (3300) பேரும் இருந்தார்கள். 
2நாளா 2:18 இவர்களில் அவன் எழுபதினாயிரம் பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு (3600) பேரை ஜனத்தின் வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான். 

உதாரணம் #3: (2,000? அல்லது 3,000?)

1ராஜா 7:26 அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது இரண்டாயிரம் (2000) குடம் தண்ணீர் பிடிக்கும்
2நாளா 4:5 அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது மூவாயிரம் (3000) குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது

உதாரணம் #4: (குழப்பம்)

2சாமு 24:9 யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம் (8,00,000) பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்துலட்சம் (5,00.000) பேர் இருந்தார்கள்.
1நாளா 21:5 ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம் (11,00,000) பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம் (4,70,000) பேரும் இருந்தார்கள்.

உதாரணம் #5: (700? அல்லது 7,000?)

2சாமு 10:18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு (700) இரதவீரரையும்... 
1நாளா 19:18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் ஏழாயிரம் (7,000) இரதங்களின் மனுஷரையும்...

உதாரணம் #6: (சவுல் கர்த்தரிடத்தில் விசாரித்தாரா, விசாரிக்கவில்லையா)

1சாமு 28:6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
1நாளா 10:13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். 

உதாரணம் #7: தாவீது அர்வனாவுக்கு (50) சேக்கல் வெள்ளி கொடுத்தாரா அல்லது 600 சேக்கல் பொன் கொடுத்தாரா?

2சாமு 24:24 ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது (50) சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்
1நாளா 21:24 அதற்குத் தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதைப் பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, 1நாளா 21:25 தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு (600) சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து

உதாரணம் #8: தாவீதின் தகப்பனுக்கு எத்தனை ஆண்குழந்தைகள் இருந்தார்கள்? 7? 8?

1சாமு 16:10 இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;
1சாமு 16:11 உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான். 
1சாமு 17:12 .... ஈசாயுக்கு எட்டுக் (8) குமாரர் இருந்தார்கள்;...
1நாளா 2:13  ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
1நாளா 2:14 நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும், 1நாளா 2:15  ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான். 


உதாரணம் #9: நகசோனுடைய மகன் யார்? ஆண்? பெண்?

ரூத் 4:20 அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் (SALMON) பெற்றான். 
1நாளா 2:11 நகசோன் சல்மாவைப் (SALMA) பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான். 

வேண்டுமானால் இன்னும் 200க்கு மேல் வேறுபாடுகள் காண்பிக்கலாம். இந்த வேறுபாடுகள் எல்லாம் 1, 2 நாளாகம புத்தகங்களில் கண்டுவருகிறது என்பதே ஆச்சரியம். 

என் கருத்து என்னவென்றால் 1, 2 நாளாகம புத்தகங்களில் ஏராளமான வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது, ஒருவேளை 1நாளா 21:1ல் சாத்தான் என்று எழுதப்பட்டுள்ளது அப்படிப்பட்ட ஒரு வேறுபாடாக இருக்கலாம்.

அப்படியானால், வேதத்தில் தவறுகள் இருக்கிறதா?


தவறு என்கிற வார்த்தை நான் இதுவரைக்கும் பயன்படுத்தவில்லை! வேதபாரகர்கள் படியெடுக்கும்போது வேறுபாடுகள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பதே என்னுடைய கருத்து.

அப்படியானால், கர்த்தர் தாவீதை ஏவினாரா? 

யாத்திராகமத்தில் எங்கேயும் சாத்தான் என்கிற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார் என்று 19 தடவை எழுதப்பட்டுள்ளதை பார்க்கிறோம்:

யாத் 7:3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
(யாத் 4:21; 7:3, 13, 14, 22; 8:15, 19. 32; 9:7, 12, 34, 35; 10:1, 20. 27; 11:10; 14:4, 8, 17 காணவும்)

மீண்டும், கர்த்தர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய மனதைக் கடினப்படுத்தினார் என்று வேதம்:

உபா 2:30 ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு சத்துருக்களின் இருதயங்களை கர்த்தர் கடினப்படுத்தினார் என்று வேதம்.

யோசு 11:20 யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும் (For it was of the LORD to harden their hearts - KJV), இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம் பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது. 

எதை நம்புவீர்கள் வேதத்தையா, உங்கள் முன்னெண்ணங்களையா?

ஒருவேளை சங்கரிக்கிற தூதன் சாத்தானாக இருக்கூடாதா?


சங்கரிக்கிற தூதன் என்பவர் தாவீதை தண்டிக்கிறதற்காக முதல்முறையாக நியமிக்கப்படவில்லை. இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்தும் விடுவிக்கும் முன் எகிப்தியர்களை அழிப்பதற்கும் சங்கரிக்கிற தூதனை கர்த்தர் பயன்படுத்தினார்.

யாத் 12:23 கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.

சங்காரக்காரன் அல்லது சங்கரிக்கிற தூதன் கர்த்தருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறவர். அவர் தன்னிச்சையாக எதுவும் பண்ணமாட்டார். அல்லாவிட்டால் அவர் எகிப்தியர்களின் முதற்பேறான ஆண்குழந்தைகளை மட்டும் கொலை பண்ணாமல், எகிப்தியர்கள் அனைவரையும் ஒருவேளை இஸ்ரவேல் மக்களையும் கொலை பண்ணுவதற்கு வாய்ப்பில்லையா? சங்காரக்காரன் கர்த்தருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்காதவனாக இருந்தால், கர்த்தர் கொலை பண் என்று அவரிடம் சொன்னால், இல்லை, நான் பண்ணமாட்டேன் என்று சொல்லலாமே?

தாவீதின் நிமித்தம் கர்த்தர் இஸ்ரவேலை தண்டித்தபோது, தாவீது பலிகளைச் செலுத்தி, விண்ணப்பம் பண்ணினபோது, கர்த்தர் சங்கரிக்கிற தூதனிடம் அவனுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று சொன்னார். (1நாளா 21:27) அப்பொழுது இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது (2சமு 24:25). அதாவது, சங்கரிக்கிற தூதன் முழுதாக கர்த்தருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறவர்.

கிறித்தவர்கள் போதிக்கிற சாத்தான் கர்த்தருக்கு கீழ்படியாதவனும் கட்டுக்கடங்காதவனும் அல்லவா?
தொடரும்...

கிறிஸ்துவுக்குள்,

டோம்ஸான் கட்டய்க்கல்