சனி, 4 ஏப்ரல், 2015

யோபும் சாத்தானும் - பகுதி #001

நண்பர்களே,

சாத்தான் ஒரு நபர் கிடையாது என்று சொன்ன உடனே எழும்புகிற கேள்வி: “அப்படியானால், யோபை சோதிக்கும்படிக்கு கர்த்தர் சாத்தானை அனுப்பினாரே?” என்பதே.

யோபுக்கு 5 வகையான சோதனைகள் ஏற்பட்டது, அவைகளை ஒவ்வொன்றாக கவனிக்கலாம்:

சோதனை #1:


யோபு 1:13 பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,
யோபு 1:14 ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில்,
யோபு 1:15 சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். 

இந்த உபத்திரவம் அல்லது சோதனை சாத்தானிடத்திலிருந்தும் உண்டானது என்று வேதம் கூறுபதில்லை; மாறாக, சபேயரிடத்திலிருந்தும் உண்டானது என்று வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.

சபேயர் யார்?

  1. நோவாவின் குமாரரில் ஒருவராகிய காமின் குமாரன் கூஷின் குமாரனாகிய சேபாவின் சந்ததியினர். (ஆதி 10:7) 
  2. அல்லது, ஆபிரகாமின் இரண்டாம் மனைவியாகிய கேத்தூராளின் குமாரனாகிய யக்க்ஷானின் குமாரனாகிய சேபாவின் சந்ததியினர். (ஆதி 25:1-3) 

சாலொமோனிடம் விடுகதைகள் கேட்கிறதற்கு வந்த சேபாவின் ராஜஸ்திரீ (1ராஜா 10:1) இந்த சந்ததிக்கு உட்பட்டவள்.

ஒருவேளை, புறஜாதியார் அனைவரும் சாத்தானுடைய கூட்டாளிகள் என்று வற்புறுத்தலாம், ஆனால், இஸ்ரவேல் மக்களை தண்டிப்பதற்காக கர்த்தர் புறஜாதியாரை பலமுறை பயன்படுத்தினார் என்பதை மறக்கவேண்டாம். (நியா 2:14; 3:8; 4:2; 10:7; 1சமு 12:9)

அதுவும் அல்லாமல், சேபாவைப் பற்றி வேதம் கூறுகிறதை கவனியுங்கள்.
  • நீதியோடும் நியாயத்தோடும் ஏழைகளை விசாரிக்கிற ராஜாவின் குமாரனுக்கு (சங் 72:1, 2) - அடையாளமாக கிறிஸ்துவுக்கு - சேபாவின் ராஜாக்கள் வெகுமானங்களை கொண்டுவருவார்கள் என்கிறார் சலோமோன் (சங் 72:10).
  • நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக சேபாவின் ராஜஸ்திரீ குற்றஞ்சுமத்துவாள் என்றார் இயேசு. (மத் 12:42)
சுருக்கமாகச் சொன்னால் சேபா தேசத்தார் சாத்தானுடைய கூட்டாளிகள் என்று வேதத்தில் எங்கேயும் இல்லை.

சோதனை #2:


யோபு 1:16 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது....

கவனமாக வாசியுங்கள்: வானத்திலிருந்தும் விழுந்தது தேவனுடைய அக்கினியா அல்லது சாத்தானுடைய அக்கினியா? தேவனுடைய அக்கினியை தேவனுக்கு கீழ்படியாதவனாகிய சாத்தானிடம் தற்காலிகமாக ஒப்பளித்தாலும் கூட அவன் அதை தேவனுக்கு திரும்பிக்கொடுப்பான் என்பதற்கு உறுதி உண்டா?

வேதத்தில் வேறு எங்காவது சாத்தானோ அவனுடைய கூட்டாளிகளோ வானத்திலிருந்தும் அக்கினியை விழச்செய்ததாக எழுதப்பட்டிருக்கிறதா? இல்லையே! சாத்தானுடைய கூட்டாளிகளுக்கு வானத்திலிருந்தும் அக்கினியை விழச்செய்ய வல்லமையிருந்தால் எலியாவின் காலத்திலிருந்த பாகாலின் 450 தீர்க்கதரிசிகளுக்கு வானத்திலிருந்தும் அக்கினியை விழச்செய்ய ஏன் முடியவில்லை? (1ராஜா 18)

வானத்திலிருந்தும் அக்கினியை விழச்செய்கிறது தேவனுக்கும் தேவனுடைய மக்களுக்கும் அடுத்தது.
  • ஆதி 19:24 ... கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின் மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, ... (கர்த்தராலே, சாத்தானாலே அல்லை)
  • யாத் 9:23 ... மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின் மேல் வேகமாய் ஓடிற்று; எகிப்து தேசத்தின் மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்; (இங்கேயும் சாத்தான் இல்லை)
  • தன்னிடத்தில் விசாரிக்கும்படிக்கு அகசியா ராஜா அனுப்பின ஆட்கள் மேல் எலியா அக்கினியை விழச்செய்தது: (2ராஜா 1:12, 14)
  • இஸ்ரவேல் மக்களை தொகையிட்டதற்கு உண்டான தேவகோபம் இஸ்ரவேலை விட்டுநீங்கும்படிக்கு தாவீது பலிசெலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினபோது; வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்தது... (1நாளா 21:26)
  • தான் கட்டின தேவாலயத்தில் சாலொமோன் ஜெபம்பண்ணினபோது அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது (2நாளா 7:1)
  • புதிய ஏற்பாடில் இயேசுவையும் சீடர்களையும் ஏற்றுக்கொள்ளாத சமாரியரைப் பற்றி யாக்கோபும் யோவானும்: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டது (லூக 9:54)

அடையாள ரூபமாக எழுதப்பட்ட வெளிப்படுத்தலின் விசேஷத்தில் உள்ள இரண்டாவது மிருகத்தைத் தவிர (வெளி 13:13), வேறு எல்லாச் சூழமைவுகளிலும் அக்கினியை வானத்திலிருந்தும் விழச்செய்தவர்கள் தேவன் அல்லது தேவனுடைய பிள்ளைகளே.

தேவனுக்கு கீழ்படியாதவனாகிய சாத்தானுக்கு வானத்திலிருந்தும் அக்கினி விழச்செய்கிற வல்லமையிருந்தால் அவன் மனிதர்களை எப்பொழுதே அழித்திருப்பான்? ஒருவேளை, அப்படியல்லை, தேவன் அனுமதித்தால் மட்டுமே சாத்தான் தீங்குச் செய்வான் என்று வற்புறுத்தலாம், ஆனால், தேவன் அனுமதித்தால் மட்டும் தீங்குச் செய்கிறவன் தேவனை மறுக்கிறவன் அல்லை. தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறவன். சாத்தான் தேவனுக்கு கீழ்பட்டிருக்கிறவனாகில் அவனையும் அவனுடைய செய்கைகளையும் அழிக்கும்படிக்கு இயேசு மனிதனாக பிறக்கத் தேவையில்லையே! (எபி 2:14; 1யோவா 3:8).

சோதனை #3


  • யோபு 1:17 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்;...

இங்கே சாத்தான் யோபுக்கு கேடுபண்ணினார் என்று எழுதப்பட்டுள்ளதா? இல்லையே! மாறாக கல்தேயர் கேடுபண்ணினார்கள் என்று தானே எழுதப்பட்டுள்ளது?

கல்தேயர் கேடு பண்ணினபோதெல்லாம் அந்த கேடு சாத்தானிடத்திலிருந்தும் உண்டானதா?

இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் பண்ணினபோது தேவன் அவர்களை தண்டிக்கும்படியாக கல்தேயர் இடத்திலும், கல்தேயர்களின் நாடாகிய பாபேலின் அரசர்களிடத்திலும் ஒப்படைத்தார் என்று வேதம் கூறுகிறது.

2ராஜா 24:2 அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும் அவன்மேல் வரவிட்டார்; .... அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.
2நாளா 36:17 ஆதலால் அவர் [கர்த்தர்] அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

தேவன் இஸ்ரவேலை பாபிலோணின் அரசனாகிய நேபுகாத்நேச்சார் இடத்தில் ஒப்படைத்தார் என்பதாகி பலமுறை சொன்ன பிறகு, நேபுகாத்நேச்சாரை “என் ஊழியக்காரன்” என்றும் அழைத்தார்.“

எரே 25:9 இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல் போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (எரே 27:6; 43:10 காணவும்)
சுருக்கமாகச் சொன்னால், கல்தேயர் அல்லது, பாபிலோனியர் சாத்தானுடைய ஊழிக்கார் என்று கூறுகிற வசனம் எதுவும் இல்லை.

சோதனை #4


யோபு 1:18 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,
யோபு 1:19 வனாந்தரவழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
இதில் எங்கேயும் சாத்தான் பெருங்காற்றை கொண்டுவந்தார் என்று எழுதப்படவில்லை! இதற்குமுன் அக்கினியைப் பற்றிச் சொன்னதுபோல, இயற்கை சக்திகளை அடக்குகிறது தேவனுக்கும் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் அடுத்தது.

  • எகிப்திலிருந்தும் இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும் முன் மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இரா முழுவதும் கீழ்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார் (யாத் 10:13)
  • எகிப்திலிருந்தும் புறப்பட்ட இஸ்ரவேல் மக்கள் செங்கடலை கடந்துபோகவேண்டிய வேளையில் மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. (யாத் 14:21; யாத் 15:10உம் காணவும்).

பழைய ஏற்பாடில் இன்னும் ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது.

புதிய ஏற்பாடில் இயேசு சுழல்காற்றை அடங்கச்செய்ததைப் பற்றி வாசிக்கிறோம். (மார் 4:37-41). அதைப் பார்த்த ஜனங்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். சாத்தானுக்கும் அதே வல்லமை இருந்ததானால், ‘இதென்னா பெரிய விஷயமா? சாத்தானும் இதுதான் பண்ணுவானே?’ என்று சொல்லுவார், அல்லவா?

சாத்தானுக்கு தேவனுக்கு (அல்லது இயேசுவுக்கு) இருக்கிற அதே வல்லமை இருந்தால், அவனை தோற்கடிக்க தேவனாலே கூடுமா?

இயற்கை சக்திகள் அனைத்தும் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறதைத் தவிர, சாத்தானுக்கு கீழ்ப்படிந்திருக்கிறதில்லை. (உதா எரே 5:22; சங் 29:3)


சோதனை #5



யோபு 2:7 அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

இந்த ஒரே ஒரு சோதனையில் மட்டும் சாத்தானுடைய பெயர் நேரடியாக எழுதப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

யோபுக்கு ஏற்பட்ட அதே நோய், ஒவ்வொரு அம்சத்திலும், தேவனுக்கு கீழ்ப்படியாதவருக்கு வரச்செய்வார் என்று தேவன் கூறியிருக்கிறதை கவனிக்கவும்:
உபா 28:35 உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.

இந்த இரண்டு வசனங்களும் ஆங்கில வேதாகமத்திலிருந்தும் எடுத்தெழுதுதியிருக்கிறதை கவனியுங்கள். (ஒவ்வொரு வார்த்தையின் வலபக்கத்திலுள்ள எண் ஸ்ட்ராங்ஸ் அகராதியில் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் குறியீட்டு எண்).

Deu 28:35 The LORD shall smite[H5221] thee in the knees, and in the legs, with a sore[H7451] botch[H7822] that cannot be healed, from the sole[H3709] of thy foot[H7272] unto the top of thy head[H6936].

Job 2:7 So went Satan forth from the presence of the LORD, and smote[H5221] Job with sore[H7451] boils[H7822] from the sole[H3709] of his foot[H7272] unto his crown[H6936].

இரண்டும் ஒரே விதமான வாதை. கர்த்தரை மறுதலித்த இஸ்ரவேல் மக்களுக்கு தண்டனை அளிக்கிறதற்கு கர்த்தர் போதுமாயிருந்தது, ஆனால், உத்தமனும் சன்மார்க்கனும் ஆயிருந்த யோபை பாதிக்கிறதற்கு சாத்தான் தேவைப்பட்டது! ஏன்? ஏன்?

அப்படியானால், யோபுக்கு உபத்திரவம் உண்டுபண்ணினது யார்?

அடுத்த பகுதியில் தொடரும்.

கிறிஸ்துவுக்குள்
டோம்ஸான் கட்டய்க்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக