புதன், 1 ஏப்ரல், 2015

சாத்தானும் “விழுந்துபோன தூதர்களும்” - 002 - 1நாளாகமம் 21:1ல் சாத்தான்.

வேதாகம மொழிபெயர்ப்புகளில் சாத்தான் என்கிற வார்த்தை முதல்முறையாக காணப்படுகிறது 1நாளாகமம் 21:1லே. 1நாளாகமம் 21ல் விபரிக்கப்படுகிற நிகழ்சி என்னவென்றால் தாவீது இஸ்ரவேலைத் தொகையிட்டதும் அதற்கு அவருக்கு கிடைத்த தண்டனையும்.
  
1நாளா 21:1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
 இதே நிகழ்சி 2 சமுவேல் 24லிலிருந்தும்:

2சமு 24:1 கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின் மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.
இந்த இரண்டு சூழமைவுகளிலும்:

  • சோதிக்கப்பட்ட நபர்: தாவீது. (2சமு 24:1; 1நாளா 21:1) 
  • நிகழ்நத விஷயம் இஸ்ரவேல் தொகையிடப்பட்டது(2சமு 24:1; 1நாளா 21:1). 
  • தொகையிடப் போனவர் யோவாப் (2சமு 24:4; 1நாளா 21:4). 
  • தண்டனை அளிக்க பயன்படுத்தப்பட்டவர் சங்கரிக்கிற தூதன். (2சமு 24:17; 1நாளா 21:15)

இந்த இரண்டு சூழமைவுகளிலும் இருக்கிற ஒரே வித்தியாசம் அல்லது மிகப்பெரிய வித்தியாசம் தாவீதை ஏவிவிட்டது யார் என்பதே.

  • 1நாளாகமம் 21:1ன் படி சாத்தான் ஏவிவிட்டார். 
  • 2சமுவேல் 24:1ன் படி கர்த்தர் ஏவிவிட்டார். 

அப்படியானால், சாத்தானும் கர்த்தரும் ஒருவரா? அல்லது, வேதாகமத்தில் முரண்பாடுகள் இருக்கிறதா? 

இந்த விஷயத்தைப் பற்றி கிறித்தவ போதகர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் தெளிவான பதில் கொடுக்கமாட்டார்கள். ஒரு சிலர் கேட்கிறவனைப் பற்றி ‘இவனுக்கு இதுவும் கூட தெரியாதா?’ என்று கேளி பண்ணுவார்கள். இன்னும் சிலர், அவர்களுடைய அறிவின்மையை மறைக்கும்படிக்கு சும்மா சிரிப்பார்கள். 

இந்த இரண்டு சூழமைவுகளை பயன்படுத்தி நாத்திகர்களும் கிறிஸ்தவத்தை மறுதலிக்கிறவர்களும் கர்த்தர் தான் சாத்தான், சாத்தான் தான் கர்த்தர் வற்புறுத்துவார்கள். 

அதிர்ச்சிகரமான உண்மை:

1, 2 நாளாகம புத்தகங்ளிலிருந்தும் ஒருசில வசனங்களை மற்று புத்தகங்ளுடன் ஒப்பிட்டு பார்ப்போம். (தயவு செய்து இந்த பதிவை வாசிக்கும்போது உங்கள் வேதாகமத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.)


உதாரணம் #1: (8? அல்லது 18?)

2ராஜா 24:8 யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு (18) வயதாயிருந்து...
2நாளா 36:9 யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு (8) வயதாயிருந்து...

 உதாரணம் #2: (3,300? அல்லது 3,600?)


1ராஜா 5:15 சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் எழுபதினாயிரம் பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரம் பேரும்,
1ராஜா 5:16 இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறு (3300) பேரும் இருந்தார்கள். 
2நாளா 2:18 இவர்களில் அவன் எழுபதினாயிரம் பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு (3600) பேரை ஜனத்தின் வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான். 

உதாரணம் #3: (2,000? அல்லது 3,000?)

1ராஜா 7:26 அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது இரண்டாயிரம் (2000) குடம் தண்ணீர் பிடிக்கும்
2நாளா 4:5 அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது மூவாயிரம் (3000) குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது

உதாரணம் #4: (குழப்பம்)

2சாமு 24:9 யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம் (8,00,000) பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்துலட்சம் (5,00.000) பேர் இருந்தார்கள்.
1நாளா 21:5 ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம் (11,00,000) பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம் (4,70,000) பேரும் இருந்தார்கள்.

உதாரணம் #5: (700? அல்லது 7,000?)

2சாமு 10:18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு (700) இரதவீரரையும்... 
1நாளா 19:18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் ஏழாயிரம் (7,000) இரதங்களின் மனுஷரையும்...

உதாரணம் #6: (சவுல் கர்த்தரிடத்தில் விசாரித்தாரா, விசாரிக்கவில்லையா)

1சாமு 28:6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
1நாளா 10:13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். 

உதாரணம் #7: தாவீது அர்வனாவுக்கு (50) சேக்கல் வெள்ளி கொடுத்தாரா அல்லது 600 சேக்கல் பொன் கொடுத்தாரா?

2சாமு 24:24 ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது (50) சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்
1நாளா 21:24 அதற்குத் தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதைப் பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, 1நாளா 21:25 தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு (600) சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து

உதாரணம் #8: தாவீதின் தகப்பனுக்கு எத்தனை ஆண்குழந்தைகள் இருந்தார்கள்? 7? 8?

1சாமு 16:10 இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;
1சாமு 16:11 உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான். 
1சாமு 17:12 .... ஈசாயுக்கு எட்டுக் (8) குமாரர் இருந்தார்கள்;...
1நாளா 2:13  ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
1நாளா 2:14 நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும், 1நாளா 2:15  ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான். 


உதாரணம் #9: நகசோனுடைய மகன் யார்? ஆண்? பெண்?

ரூத் 4:20 அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் (SALMON) பெற்றான். 
1நாளா 2:11 நகசோன் சல்மாவைப் (SALMA) பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான். 

வேண்டுமானால் இன்னும் 200க்கு மேல் வேறுபாடுகள் காண்பிக்கலாம். இந்த வேறுபாடுகள் எல்லாம் 1, 2 நாளாகம புத்தகங்களில் கண்டுவருகிறது என்பதே ஆச்சரியம். 

என் கருத்து என்னவென்றால் 1, 2 நாளாகம புத்தகங்களில் ஏராளமான வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது, ஒருவேளை 1நாளா 21:1ல் சாத்தான் என்று எழுதப்பட்டுள்ளது அப்படிப்பட்ட ஒரு வேறுபாடாக இருக்கலாம்.

அப்படியானால், வேதத்தில் தவறுகள் இருக்கிறதா?


தவறு என்கிற வார்த்தை நான் இதுவரைக்கும் பயன்படுத்தவில்லை! வேதபாரகர்கள் படியெடுக்கும்போது வேறுபாடுகள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பதே என்னுடைய கருத்து.

அப்படியானால், கர்த்தர் தாவீதை ஏவினாரா? 

யாத்திராகமத்தில் எங்கேயும் சாத்தான் என்கிற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார் என்று 19 தடவை எழுதப்பட்டுள்ளதை பார்க்கிறோம்:

யாத் 7:3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
(யாத் 4:21; 7:3, 13, 14, 22; 8:15, 19. 32; 9:7, 12, 34, 35; 10:1, 20. 27; 11:10; 14:4, 8, 17 காணவும்)

மீண்டும், கர்த்தர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய மனதைக் கடினப்படுத்தினார் என்று வேதம்:

உபா 2:30 ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு சத்துருக்களின் இருதயங்களை கர்த்தர் கடினப்படுத்தினார் என்று வேதம்.

யோசு 11:20 யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும் (For it was of the LORD to harden their hearts - KJV), இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம் பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது. 

எதை நம்புவீர்கள் வேதத்தையா, உங்கள் முன்னெண்ணங்களையா?

ஒருவேளை சங்கரிக்கிற தூதன் சாத்தானாக இருக்கூடாதா?


சங்கரிக்கிற தூதன் என்பவர் தாவீதை தண்டிக்கிறதற்காக முதல்முறையாக நியமிக்கப்படவில்லை. இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்தும் விடுவிக்கும் முன் எகிப்தியர்களை அழிப்பதற்கும் சங்கரிக்கிற தூதனை கர்த்தர் பயன்படுத்தினார்.

யாத் 12:23 கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.

சங்காரக்காரன் அல்லது சங்கரிக்கிற தூதன் கர்த்தருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறவர். அவர் தன்னிச்சையாக எதுவும் பண்ணமாட்டார். அல்லாவிட்டால் அவர் எகிப்தியர்களின் முதற்பேறான ஆண்குழந்தைகளை மட்டும் கொலை பண்ணாமல், எகிப்தியர்கள் அனைவரையும் ஒருவேளை இஸ்ரவேல் மக்களையும் கொலை பண்ணுவதற்கு வாய்ப்பில்லையா? சங்காரக்காரன் கர்த்தருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்காதவனாக இருந்தால், கர்த்தர் கொலை பண் என்று அவரிடம் சொன்னால், இல்லை, நான் பண்ணமாட்டேன் என்று சொல்லலாமே?

தாவீதின் நிமித்தம் கர்த்தர் இஸ்ரவேலை தண்டித்தபோது, தாவீது பலிகளைச் செலுத்தி, விண்ணப்பம் பண்ணினபோது, கர்த்தர் சங்கரிக்கிற தூதனிடம் அவனுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று சொன்னார். (1நாளா 21:27) அப்பொழுது இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது (2சமு 24:25). அதாவது, சங்கரிக்கிற தூதன் முழுதாக கர்த்தருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறவர்.

கிறித்தவர்கள் போதிக்கிற சாத்தான் கர்த்தருக்கு கீழ்படியாதவனும் கட்டுக்கடங்காதவனும் அல்லவா?
தொடரும்...

கிறிஸ்துவுக்குள்,

டோம்ஸான் கட்டய்க்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக