வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

உண்மையாகவே இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டாரா? (பகுதி #1)

நண்பர்களே,

[எச்சரிக்கை: தமிழ் என் தாய்மொழி அல்லை, தமிழ் என் பாட்டி மொழி.]

சாத்தான் என்கிற ஒரு நபர் இல்லை என்று ஒரு கிறித்தவனிடம் சொன்னால் உடனே அவர் கேட்கிற கேள்வி இதுவே: "அப்படியானால், இயேசு சாத்தானால் சோதிக்கப்படவில்லையா?"

யோவான்ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட இயேசுவை அதே பரிசுத்த ஆவி பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்குக் கொண்டுபோனார்:
  • மத் 4:1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
வனாந்தரத்திலிருந்தும் அவரை திரும்பக் கூட்டிக்கொண்டு வந்ததும் பரிசுத்த ஆவிதான்:
  • லுக் 4:14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்.
அதாவது, வனாந்தரத்தில் இயேசு செலவிட்ட 40 நாட்களும் பரிசுத்த ஆவியின் பாதுகாப்பில் இருந்தார். அவருக்கு அளவில்லாமல் அளிக்கப்பட்டிருந்த பரிசுத்த ஆவி (யோவா 3:34) அவரை விட்டுவிலகிப் போனதுண்டா?

இயேசு எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டார்...

கவனமாக வாசியுங்கள்:
  • எபி 4:15 நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
இயேசு எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டிருக்கும்போது, உங்களுக்கு சோதனை ஏற்ப்பட்டபோதெல்லாம் சாத்தான் அல்லது பிசாசு என்கிற கொம்பும், வாலும் உடைய ஒரு உருவம் திரிசூலத்தைப் பிடித்துக்கொண்டு உங்கள் முன்நிலையில் நின்றுக்கொண்டிருந்தாரா?

வேறு வகையில் கூறினால்  உங்களுக்கு ஏற்ப்படாத ஒருவிதமான சோதனையும் இயேசுவுக்கு ஏற்ப்படவில்லை.

பரிசுத்த ஆவி உங்களை எங்கு வழிநடத்துவார்?



பரிசுத்த ஆவி இயேசுவை சாத்தானால் சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்கு கூட்டிக்கொண்டுபோனார் என்று எழுதப்பட்டுள்ளது, அப்படியானால், பரிசுத்த ஆவி உங்களை எங்கு வழிநடத்துவார்? சாத்தானிடத்திற்கு வழிநடத்துவாரா? அப்படி வேதம் கூறுகிறதுண்டா?
  • யோவா 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
தேவனுடைய ஒரே பேறான குமாரனையே சாத்தானால் சோதிக்கப்படுவதற்காக வனாந்தரத்துக்கு கூட்டிக்கொண்டுபோன பரிசுத்த ஆவி, உங்களை அப்படி பண்ணமாட்டார் என்பதற்கு எதாவது உத்தரவாதம் இருக்கிறதா?

இயேசுவின் காலத்தில் பூமி தகடு (தட்டு) போல் இருந்ததா?


  • மத் 4:8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
பூமி ஒரு உருண்டை என்பதற்க்கு விவாதம் எதுவும் இல்லை (பூமி உருண்டை அல்ல என்று அடம்பிடிக்கிற கிறித்தவர்களும் உண்டு.) பூமியின் ஆரம் 6371 கி.மி. பூமியிலேயே மிக உயர்ந்த மலை எவரெஸ்ட், அதின் உயரம் 14:16 கி.மி. 


6371 கி.மி. ஆரமுடைய பூமி என்கிற உருண்டையின் மேல் இருக்கும் 14:16 கி.மி உயரம் மட்டுமுள்ள எவரெஸ்ட் மலையின் மேல் ஏறினாலும் உலகத்திலுள்ள சகல ராஜ்யங்களையும் பார்க்கக்கூடுமா? எவரெஸ்ட் மலையை விட உயரமுள்ள மலை எருசலேமின் அல்லது இஸ்ரவேலின் சுற்றுப்புறங்களில் இருக்கிறதா? இருந்ததா? ஒரு செயற்கைக்கோளில் (satellite) ஏறினாலும் “ஒரு நிமிஷத்திலே” உலகத்தின் சகல இராஜ்யங்களையும் காண்பிக்கக்கூடுமா?

இந்த கேள்வியை உங்கள் போதகரிடம் கேட்டால்: "இல்லை, அப்படியல்ல, இந்த நிகழ்வு சொல்லுக்குச்சொல், நடக்கவில்லை, அது ஆவிக்குரிய அல்லது அடையாளமாக விளக்கமுடையது" என்று சொல்வார்கள். அதையே தான் நானும் சொல்கிறேன். அதைச் சொல்வதற்கு 5 வருடம் வேதாகம கல்லூரியில் படிக்கத் தேவையில்லை, பகுத்தறிவு இருந்தாலே போதும்.

40 நாள் பட்டினியிருந்த ஒருவரால் மலை ஏற முடியுமா? 100 கி.மி. நடக்க முடியுமா?


இயேசு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட யோர்தானிலிருந்தும் தெற்குள்ள வனாந்தரத்துக்கு ஏறத்தாழ 32 கி. மி தூரம் இருக்கிறது. எருசலேமுக்கு கிட்ட இருக்கும் மிகப்பெரிய மலை எர்மோன் (உயரம் 2813 மீட்டர் அல்லது 2.8 கி. மி.), எருசலேமுக்கும் வடக்கு திசையில் உள்ள எர்மோன் வரைக்கும் இடையில் உள்ள தூரம் 113 கி. மி. அதாவது வனாந்தரத்திலிருந்து எர்மோன் வரைக்கும் ஏறத்தாழ 145 கி. மி. தூரம்.

இயேசுவின் காலத்தில் பேருந்துகளோ, ரயில் வண்டிகளோ இருக்கவில்லை. அப்படியிருக்க, 40 நாள் பட்டினியிருந்த ஒருவருக்கு 145 கி. மி. நடந்துபோய், 2.8 கி. மி. உயரமுடைய எர்மோன் மலை ஏறமுடியுமா?

3 நாள் பட்டினியிருந்த ஒருவனுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியுமா? தாவீது அரசனாகும் முன் நடந்த இந்த நிகழ்வை கவனியுங்கள்:
  • 1சாமு 30:11 ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
  • 1சாமு 30:12 அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.
தாவீதின் வேலைக்காரர்கள் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகுதான் மூன்றே மூன்று நாள் பட்டினியிருந்த அந்த எகிப்தியனுடைய உயிர் அவனுக்குள் திரும்பிவந்ததாம், அப்படியிருக்க 40 நாள் பட்டினியிருந்த இயேசுவின் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்பதை யோசியுங்கள்.

இயேசு 40 நாள் பட்டினியிருந்த பிறகு கலிலேயாவுக்குத் திரும்பிப் போகும் முன் அவர் பட்டினியாகவே போனாரா? இல்லை:

  • மத் 4:11 அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள். (angels came and ministered unto him)/

பணிவிடை செய்தார்கள் என்றால் விசிறி வீசினார்கள் என்று அர்த்தமா? இல்லை, 40 நாள் பட்டினியிருந்த அவருக்குக் குடிக்க தண்ணீரும் சாப்பிட சாப்பாடும் அளித்தார்கள்.

தேவாலயம் எருசலேமில் இருந்ததா? அல்லது வனாந்தரத்தில் இருந்ததா?


இயேசு 40 நாள் வனாந்தரத்தில் பிசாசினால் சோதிக்கப்பட்டுகொண்டிருந்தார், அல்லவா? வனாந்தரத்தில் இருக்கையில் பிசாசு இயேசுவை எருசலேமிலுள்ள தேவாலயத்துக்கு கூட்டிக்கொண்டுவந்து அதன் உச்சியில் நிற்கவைத்தானாம்!!
  • மத் 4:5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:
  • லுக் 4:9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக் குதியும்.
வீரப்பன் உயிரோடிருந்த காலத்தில் நீங்கள் கோவை அல்லது சென்னை பட்டணத்தின் சாலைகலில் வீரப்பனோடு கூட நடந்துபோனீர்கள் என்று செய்து பாருங்கள். அந்த நிகழ்வை தமிழ்நாட்டில் உள்ள யாராகிலும் மறக்க முடியுமா? நீங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் மக்கள் அனைவரும் அதைப்பற்றிச் சொல்லியே உங்களை கேளிபண்ணுவார்கள். காவல்துறை அதிகாரிகள் உங்களை சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.

அப்படியிருக்க, ஏராளமான எதிரிகள் இருந்த இயேசு, எருசலேம் பட்டணத்தின் சாலைகள் வழியாக கொம்பும், வாலும் உடைய சாத்தானோடு கூட நடந்து தேவாலயத்துக்கு போனதுண்டானால், பரிசேயர்களும், ஆசாரியர்களும் இவன் சாத்தானோடு கூட காணப்பட்டான் என்று அவர் மேல் குற்றம் சாட்ட மாட்டார்களா? ஒருவேளை இயேசு இரவில் சாத்தானோடு கூட எருசலேமுக்கு வந்திருந்தால் தேவாலயம் இரவில் திறந்திருக்குமா? யாரும் அவரை பார்த்திருக்க மாட்டார்களா? இயேசுவை விசாரணை செய்த வேளையிலாவது இயேசு சாத்தானோடு கூட எருசலேமின் தெருக்களில் காணப்பட்டார் என்று சான்றளிக்க ஏன் யாரும் இருக்கவில்லை? (மத் 26:60,61)

இந்த கேள்விகளை உங்கள் பாஸ்டர் அல்லது போதகரிடம் கேட்டுப்பாருங்கள், அப்பொழுதும் இல்லை, இந்த நிகழ்வு சொல்லுக்குச்சொல் நடக்கவில்லை என்று பதிலளிப்பார்கள். அதைத் தானே நானும் சொல்கிறது? இந்த நிகழ்வும் சொல்லுக்குச்சொல் நடக்கவில்லை. அது உங்கள் போதகருக்கு பகுத்தறிவு இருப்பதால் தெரியும், அனால், தெரிந்த உண்மையை உரக்கச்சொன்னால் அவர்களுக்கு சபையில் இருக்கும் வேலை போய்விடும்!

கற்களை அப்பங்களாக்க வேண்டும் என்கிற சோதனை.


  • மத் 4:2 அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்த பின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 
  • மத் 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 
ஒருவர் உபவாசம் இருந்தால் அவருக்கு முதல் இரண்டு, மூன்று நாட்களில் உண்டாகுமளவுக்கு பசி 10-15 நாட்களுக்கு அப்புறம் இராது. 20 நாட்களுக்கு அப்புறம் பசியே இராது. 40 நாட்கள் பசியாக இருந்த ஒருவர் நேரடியாக உணவு சாப்பிட்டால் அது உடம்புக்கு பெரிய கேடு உண்டாக்கும், ஒருவேளை மரணமும் ஏற்படலாம். அதினாலே தான் உபவாசத்தை முடிக்கும்போது எலுமிச்சை சாறு அல்லது குளுக்கோஸ் (glucose) கலந்த நீரைக் குடித்து முடிக்கிறார்கள்.

பரிசுத்த ஆவியையும் பகுத்தறிவையும் அளவில்லாமல் பெற்றிருந்த இயேசுவை 40 நாள் பட்டினியிருந்த பிறகு சாப்பாட்டின் விஷயத்தில் சோதிக்கிறது எளிதல்லை. சோதிக்கவேண்டுமானால் உபவாசத்தின் முதல்நாட்களில் சோதிக்கிறது மிகவும் எளிது. 

அந்த 40 நாட்களுக்கு பிறகு சாத்தான் இயேசுவை சோதிக்கவில்லையா?

இல்லை என்பார்கள், பெரும்பாலும் கிறித்தவர்களும், போதகர்களும், ஆனால், வேதம் என்ன கூறுகிறது என்பதை கவனிப்போம்:

லுக் 4:13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.

"சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்" என்பதன் அர்த்தம் என்றென்றைக்குமாக விட்டு விலகிப்போகவில்லை என்பதுதான்.

இரண்டாம் பகுதியில் தொடர்ந்து வாசிக்கவும்...

டோம்சான் கட்டக்கல்

1 கருத்து: